

சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு கவர்னர் ஆர்.வி.ஆர்லேகர், சென்னையில், ஸ்ரீ அகர்வால் சபாவின் 75-ம் ஆண்டு பவள விழா நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அப்பொழுது “நமது நாடு பன்முக கலாசார தேசம் அல்லது பல்வேறு கலாசார சமூகங்களைக் கொண்ட தேசம், எனக் குறிப்பிடுகின்றோம். இது மிகவும் தவறானது. நாம் வெவ்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்கள் அல்ல. வட இந்தியா முதல் தென்னிந்தியா வரை அனைவருக்கும் ஒரே கலாசாரம்தான்” என அவர் பேசியுள்ளார். கவர்னரின் இந்த உரை இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
இந்தியா ஒரே தேசம், ஒரே கலாசாரம், ஒரே மொழியை கொண்டது எனவும், அது இந்துதேசம், இந்து கலாசாரம், இந்தி மொழி எனவும் ஆர்எஸ்எஸ் பன்முகத்தன்மைக்கு எதிராக கூறிவருகிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் இக்கருத்தை பிரதிபலிக்கும் வகையில் கவர்னர் ஆர்.வி.ஆர்லேகர் கூறியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
இந்தியா பல்வேறு இனங்கள், தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள், கலாசாரங்கள் கொண்ட நாடாகும். ஒரே மதத்தினரிடையே கூட பல்வேறு கலாசாரங்கள், பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழி பேசுவோர், பல்வேறு வழிபாட்டு முறைகள், மத நம்பிக்கை உள்ளோர், சர்வ மதங்களையும் சமமாக பாவிப்போர், எந்த மதத்தையும் பின்பற்றாதோர், மதங்களை கடந்து மணம்புரிந்து வாழ்வோர், கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகவாதிகள் போன்றோர் இந்தியச் சமூகத்தில் நீண்ட நெடிய காலமாக உண்டு. உணவுப் பழக்க வழங்களிலும், உடைகள் அணிவதிலும் கூட வேறுபாடுகள் உண்டு.
அத்தகைய வேறுபாடுகளை கடந்து, இந்திய மக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னத கோட்பாட்டை பின்பற்றி, ஒருவர் பண்பாட்டை மற்றொருவர் மதித்து நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு இது வலுசேர்க்கிறது. அதே சமயம் சமூக வளர்ச்சிப் போக்கில் இயல்பான கலாசார கலப்பும் இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவின் வரலாற்று ரீதியான, பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கை முறையை ஏற்க மறுத்து, இந்துத்துவா மதவெறி அரசியலை முன்னெடுக்கும் வகையில் ஆர்எஸ்எஸ்-ன் ஒற்றைக் கலாசாரத்தை திணிக்க கவர்னர் ஆர்.வி.ஆர்லேகர் முயல்வதும், அதற்கு கவர்னர் பதவியை பயன்படுத்துவதும் நமது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும்.
அரசியல் சட்டத்தை காக்க வேண்டிய கவர்னரே அதற்கு எதிராக செயல்படுவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். இத்தகைய போக்கை கவர்னர் ஆர்.வி.ஆர்லேகர் உடனடியாக கைவிட வேண்டும். இல்லை எனில் அவரை கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.