விசாரணை ஜூன் 23-ந் தேதிக்கு தள்ளி வைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வருகிற ஜூன் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணை ஜூன் 23-ந் தேதிக்கு தள்ளி வைப்பு
Published on

ஊட்டி, 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வருகிற ஜூன் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, பிஜின் குட்டி ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் தனிப்படை போலீசார் சீல் வைக்கப்பட்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

3 பேர் ஆஜர்

இதற்கிடையில் கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான் ஆஜராகினார். சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜராகி செல்போன் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விசாரணை குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய 3 பேர் ஆஜராகினர். சாட்சிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து அதை ஏற்று மகிளா கோர்ட்டு நீதிபதி நாராயணன், வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com