

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த 3 மாதமாக திமுக - காங்கிரஸ் இடையே நடந்த கூட்டணி பேச்சு வார்த்தை ஒரு வழியாக நேற்று இரவோடு முடிந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்று, ஒப்பந்தத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
பின்னர் அவர் முக மலர்ச்சியுடன் வெளியே வந்து காரில் ஏறியபோது, அங்கிருந்த நிருபர்கள் அவரிடம், "கூட்டணி பேச்சு வார்த்தையில் என்ன நடந்தது?" என்று கேள்வி எழுப்ப, "எல்லாம் முடிந்துவிட்டது" என்று சைகை மூலம் கையை காட்டியபடி சென்றார்.
இது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி முடிவானதை குறிப்பிடுகிறாரா?, அல்லது கூட்டணியே முறிந்துவிட்டதை சொல்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது. சமூக வலைதளத்திலும் இந்த காட்சி வைரலானது.
சிறிது நேரத்தில், திமுக - காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பும் வெளிவந்தது. அதுவரை இந்த பரபரப்பு நீடித்தது. இந்த நிலையில், தஞ்சாவூரில் இன்று காலை நடைபெற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றைய நிகழ்வுக்கான விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நேற்று இரவு வரை, கூட்டணிக் கட்சியோடு பேசி, ஒரு ஒப்பந்தத்தை முடித்து விட்டுத்தான், அதுவும் வெற்றிகரமாக முடித்து விட்டுத்தான், அனைவரும் பாராட்டும் வகையில் முடித்து விட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்.
இன்றைக்கு நீங்கள் எல்லாம் வாட்ஸ்-அப்பில், சோசியல் மீடியாவில் பார்த்திருக்கலாம். அந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டு, காரில் ஏறுகிறபோது, கையை எடுத்து, “ஓவர்” என்ற அந்த ஆக்சனோடு காரில் ஏறிய காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அது நான் திட்டமிட்டு செய்ததல்ல. காரில் ஏற வருகிறபோது, அங்கே எதிரில் நின்று கொண்டிருந்த பத்திரிகை நண்பர்கள் எல்லாம் என்னைப் பார்த்து, “முடிந்துவிட்டதா? முடிந்துவிட்டதா?” என்று கேட்டார்கள். “முடிந்துவிட்டது” என்று சொன்னேன், அவ்வளவுதான்.
அது இன்றைக்கு பெரிய வைரலாகி, ‘அனைத்தும் முடிந்துவிட்டது - ஆல் ஃபினிஷ்’ என்று போட்ட மாதிரி, இன்றைக்கு அந்தக் காட்சிகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.