அதிக கட்டணம் வசூலிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை
Published on

சென்னை,

தமிழக அரசின் சார்பில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. நிறுவனம் கடந்த 15-ந் தேதி சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில் கட்டமைப்பு வசதிக்கு ஏற்ப சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தது. இவ்வாறு நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டண விவரத்தை பள்ளிகளின் விளம்பர பலகையில் ஒட்ட வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் உள்ள கட்டமைப்புக்கு ஏற்ப அந்த கல்வி கட்டணம் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் சரியாக உள்ளதா? என்று முதன்மைக்கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

கல்வி கட்டணம் அதிகம் என்று நினைத்தால் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யும் குழுவிடம் புகார் செய்யலாம். அந்த குழு, அதிகாரி ஒருவரை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அனுப்பி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று ஆராயும்.

அப்போது கல்வி கட்டணம் அதிகம் என்று தெரியவந்தால், அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய சி.பி.எஸ்.இ. நிறுவனத்திற்கு சிபாரிசு செய்யப்படும். எனவே தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளும் கல்வி கட்டணத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பள்ளிகளில் உள்ள விளம்பர பலகையில் ஒட்ட வேண்டும்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கொடுத்தால் முதன்மைக்கல்வி அதிகாரிகள் அந்த பள்ளிகள் மீது தொடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ச.கண்ணப்பன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com