சங்ககிரி, தொளசம்பட்டி, ஓமலூரில் ரெயில்வே மேம்பால பணிகளின் தரத்தை தணிக்கை குழுவினர் ஆய்வு

சங்ககிரி, தொளசம்பட்டி, ஓமலூர் பகுதிகளில் ரெயில்வே மேம்பால பணிகளின் தரம் குறித்து நேற்று நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சங்ககிரி, தொளசம்பட்டி, ஓமலூரில் ரெயில்வே மேம்பால பணிகளின் தரத்தை தணிக்கை குழுவினர் ஆய்வு
Published on

சேலம்:

சங்ககிரி, தொளசம்பட்டி, ஓமலூர் பகுதிகளில் ரெயில்வே மேம்பால பணிகளின் தரம் குறித்து நேற்று நெடுஞ்சாலைத்துறை தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தணிக்கை குழுவினர் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு இடங்களில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் மேம்பால திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் சங்ககிரி-எடப்பாடி சாலையில் ஜெ.எஸ்.டபிள்யூ. இரும்பாலை அருகிலும், தொளசம்பட்டி பகுதியிலும், சூரமங்கலம்-ஓமலூர் சாலையில் முத்துநாயக்கன்பட்டி பகுதியிலும் ரெயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இந்த ரெயில்வே மேம்பால பணிகளின் தரம் குறித்து கோவை நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம், பராமரிப்பு) கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் தலைமையில் தணிக்கை குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நில எடுப்பு பணிகள்

ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் மட்டும் தொளசம்பட்டி மற்றும் சங்ககிரி-எடப்பாடி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்திருந்ததை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு அணுகு சாலை அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும், நிலஎடுப்பு பணிகளை விரைந்து முடித்து இணை சாலை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, ரெயில்வே மேம்பாலத்தின் உறுதி தன்மை, நீளம், அகலம், சாலையின் தடிமன் மற்றும் கலவை பணிகளின் தரம், தன்மை குறித்து தணிக்கை குழுவினர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது, கோட்ட பொறியாளர்கள் வத்சலா வித்யானந்தி, மாதேஸ்வரன் மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், தணிக்கை குழு பொறியாளர்கள், தரக்கட்டுபாட்டு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com