

சென்னை,
தமிழக சட்டப்பேரவை முன்னாள் இணை செயலாளர் என்.வீரராகவன் நடத்தி வரும் ஜிபிலி ரெயின்போ ஈவென்ட்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று மாலை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி, முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சினிமா டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் அறிஞர் மணிமேகலை கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.சமரசம், எம்.கலையரசு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில் எம்.ஜி.ஆர். உருவப்படத்தை எச்.வி.ஹண்டே மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கட்டுரைகள், என்னும் புத்தகத்தை எச்.வி.ஹண்டே வெளியிட, முதல் பிரதியை மூத்த பத்திரிகையாளர் துரைகருணா பெற்றுக்கொண்டார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மதுரம் நாராயணன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மையம் சார்பில் எலி கல்யாணம் எனும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஆடிப்பாடி நடித்து காட்டினர். நிகழ்ச்சியில், மதுரம் நாராயணன் மனவளர்ச்சி குழந்தைகளுக்கான மையத்துக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை ஜிபிலி ரெயின்போ ஈவென்ட்ஸ் சார்பில் வழங்கப்பட்டது. இதனை மையத்தின் நிறுவனர் விமலா கண்ணன் பெற்றுக்கொண்டார். முன்னதாக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன், சிறப்பு விருந்தினர்கள் கேக் வெட்டி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடினர்.
விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:
கலைத்துறை, அரசியல் எனும் இரண்டிலும் வள்ளல் தன்மையுடன் திகழ்ந்த, வாழ்ந்த வரலாறு ஒருவருக்கு உண்டென்றால், அது எம்.ஜி.ஆருக்கு தான். அறம்சார் அரசியலை அரங்கேற்ற தன்னையே அர்ப்பணித்த மாமனிதர் எம்.ஜி.ஆர். ஒருவர் தான். ஒரு நூற்றாண்டு தாண்டியும் அவர் புகழ் நிலைத்திருப்பதற்கு அதுவே காரணம்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டையொட்டி, மனிதநேய அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் எம்.ஜி.ஆர்.100 எனும் பெயரில் பனை மரங்கள் நடப்பட்டு உள்ளன. பனைமரத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள். இப்பனை மரங்கள் பூ பூக்கும்போதும், இதன் பயன்பாடு விரிவடையும் போதும், அப்போதுள்ள தலைமுறையினர் எம்.ஜி.ஆரை பற்றி பேசுவார்கள். அவர் புகழ் இன்னும் பெருகும். எனவே பனை மரங்கள் நடுங்கள் என்று அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். அதுபோல் பயன்தரும் மரம் எதுவும் இல்லை.
அதேபோல கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை ஒரு நினைவு சின்னமாக பாதுகாக்க உழைத்து கொண்டிருக்கிறோம்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மலரையும் தயாரிக்கிறோம். எனவே எம்.ஜி.ஆருடன் தொடர்புடைய, அவருடன் மறக்கமுடியாத நினைவை கொண்டவர்கள் எங்களை அணுகி உங்கள் உணர்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர். புகழை பரப்புவதன் மூலம் நாமும் பெருமை அடைகிறோம். காலத்தை வென்றவரின் பெருமை என்றும் நம் மனதில் உள்ளது. கடைசி மனிதன் உள்ளவரை எம்.ஜி.ஆர். புகழ் நிலைத்து நிற்கும். இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.