மனைவியை கொன்று 8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து காட்டு பகுதியில் வீசிய கணவர்

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மனைவியை கொன்று 8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து காட்டு பகுதியில் வீசிய கணவர்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை பேகோபுர தெரு பகுதியை சேர்ந்தவர் கோபி, ஆட்டோ டிரைவர். இவர் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் திருவண்ணாமலை அரசுடையான்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் சரண்யா (29) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் சரண்யா மாயமானார். குழந்தைகள் தாய் குறித்து கோபியிடம் கேட்ட போது சரண்யா கோபித்து கொண்டு அரசுடையான்பட்டுக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சரண்யாவை காணவில்லை என்று கோபி தரப்பினர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சரண்யாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மகள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்த சரண்யாவின் குடும்பத்தினர் திருவண்ணாமலைக்கு வந்து குழந்தைகளிடம் இது குறித்து கேட்ட போது அம்மா உங்கள் வீட்டிற்கு தான் சென்று உள்ளதாக அப்பா தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த சரண்யாவின் பெற்றோர் வெங்கடேசன் மற்றும் காவேரி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கோபியிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் அவர் தப்பி சென்று விட்டார். மேலும் வீட்டில் இருந்த கோபியின் தாய் சிவகாமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ஆரம்பத்தில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அவர் பின்னர் சரண்யாவை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி காட்டு பகுதியில் வீசியதாக தெரிவித்தார். மேலும் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த கோபியும் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் போலீசார் கோபி மற்றும் சிவகாமியை அழைத்து கொண்டு சரண்யாவின் உடல் வீசப்பட்ட இடத்திற்கு சென்றனர். சூளகிரி காட்டுப்பகுதியில் சரண்யாவின் உடல் 8 துண்டுகளாக வெட்டப்பட்டு சூட்கேசில் கவரில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அதிலும் தலை உள்ளிட்ட ஒரு சில உடல்பாகங்கள் மட்டுமே கிடைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com