வெயில் தாக்கம் எதிரொலி... டாஸ்மாக் கடைகளில் எகிறிய பீர் விற்பனை!

தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்ததும் பொதுவாக பீர் விற்பனை குறையும்.
வெயில் தாக்கம் எதிரொலி... டாஸ்மாக் கடைகளில் எகிறிய பீர் விற்பனை!
Published on: 

சென்னை,

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக கோடை காலம் முடிவடைந்ததும் பீர் விற்பனை குறைவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் பீர் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 30 லட்சம் பெட்டி பீர் வகைகளும், 50 லட்சம் பெட்டி மதுபான வகைகளும் விற்பனையாகின்றன. ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அந்தக் காலகட்டத்தில் பீர் விற்பனை 40 லட்சம் பெட்டிகள் வரை அதிகரிக்கும்.

இந்த ஆண்டு கோடை காலம் முடிவடைந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், மதுப்பிரியர்கள் பீர் வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, வழக்கமாக விற்பனை குறையும் செப்டம்பர் மாதத்திலும் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

38.80 லட்சம் பெட்டிகள் விற்பனை

கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் 38.80 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகியுள்ளது. இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 37.20 லட்சம் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை, ஒரே மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 32.99 லட்சம் பெட்டி பீர் மட்டுமே விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்ததும் பொதுவாக பீர் விற்பனை குறையும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் சராசரியாக 30 லட்சம் முதல் 32 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகும்.

ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல் முறையாக பீர் விற்பனை 38 லட்சம் பெட்டிகளைத் தாண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com