வருமான வரி கணக்கு தாக்கல் இன்று கடைசி நாள்: அபராதத்தினை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

வருமான வரி கணக்கு தாக்கல் இன்று கடைசி நாள் என்பதால் அபராதத்தினை தவிர்க்குமாறு வருமான வரித்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் இன்று கடைசி நாள்: அபராதத்தினை தவிர்க்குமாறு வலியுறுத்தல்
Published on

சென்னை,

வருமானவரிச் சட்டத்தின் கீழ், தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஆகஸ்ட் 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

வருமானவரி கணக்கை இன்று தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மேலும் வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும் என, வருமான வரித்துறை கண்டித்துள்ளது.

இன்று கட்டாதவர்களில், 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் இருப்போர், ரூ. 1,000 தாமத கட்டணமும், மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். அதனை அடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 31ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

முன்னதாக அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம் எனவும் வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றுடன் (ஆகஸ்ட் 31) வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்வது நிறைவடைய உள்ளது. இன்றே வருமான வரி கணக்கை தாக்கல் செய்து அபராதத்தினை தவிர்க்குமாறு வருமான வரித்துறை சார்பில் வலியுருத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com