சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று - சோகத்தை தாங்கி நிற்கும் கடலோர மக்கள்

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமியால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர்.
சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று - சோகத்தை தாங்கி நிற்கும் கடலோர மக்கள்
Published on

சென்னை,

அழகு என்றைக்கும் ஆபத்து என்று சொல்லப்படுவது உண்டு. அதை ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையில் வெவ்வேறு நேரங்களில் உணர்ந்திருக்கலாம். ஆனால், ஒரே நாளில் உணர்த்தி அனைவரின் மனதையும் உறையச் செய்த ஆண்டு 2004. அதுவரை கடல் அலையின் அழகை ரசித்து வந்த மக்களுக்கு, அலையும் ஒரு நாள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்த்திய நாள் டிசம்பர் 26. அன்று அதிகாலை 1 மணியளவில் இந்தோனேசியா சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பூமிக்கு கீழே 1,600 கி.மீ. நீளத்திற்கு நிலத்தட்டுகள் சரிந்தன. இதனால், இந்தியப் பெருங்கடலில் ராட்சத அலைகள் எழுந்து, கடற்கரையோர பகுதிகளை கபளீகரம் செய்ய, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக சீறிப்பாய்ந்து வந்தன. அடுத்த 3 மணி நேரத்தில், கடலோர பகுதிகளை துவம்சம் செய்தது.

இந்த கோர தாண்டவத்தில் சிக்கி இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா, மாலத்தீவு, மியான்மர் உள்பட 11 நாடுகளை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் மாண்டு போனார்கள். இந்தியாவை பொறுத்தவரை, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் சென்னை, நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 7,941 பேரின் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன.

அதிலும், நாகப்பட்டினம் கடற்கரையோர பகுதியில் மட்டும் மாண்டவர்கள் 6,039 பேர். அன்று அதிகாலை சூரியன் கண் விழித்த நேரத்தில், கடற்கரையோரம் எங்கும் மரண ஓலம் ஓங்கி ஒலித்தது. அன்றைக்கு ஏற்பட்ட அழிவை, 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நினைத்தாலும் உள்ளம் பதறுகிறது. அந்த சோகத்தை தாங்க இன்னொரு இதயம் வேண்டும்.

எத்தனையோ குடும்பங்கள் இலை உதிர்ந்த மரங்களாக கருகின. உற்றார் - உறவினர்களை இழந்து தவித்தன. உயிர் இழப்புகளை தாண்டி பொருள் இழப்புகள் வேறு. வீடு, படகு, உடைமைகள் என அத்தனையும் ஒரே நாளில் தவிடுபொடி ஆகின. சுனாமி தாக்குதலில் மொத்தம் ரூ.1,500 கோடிக்கும் மேல் பொருள் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. உலக நாடுகள் அத்தனையும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டின. இந்த 15 ஆண்டு காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இன்னும் ஏதோ ஒரு இடத்தில் சுனாமி பதித்து சென்ற கோரத்தடம் அழியாத கோலங்களாக அப்படியே காட்சிப் பொருளாக இருக்கின்றன.

பேரிழப்பை ஏற்படுத்திய சுனாமி வந்து, இன்று 15 ஆண்டுகளை கடக்க இருக்கும் நிலையில், நீங்காத நினைவுகளுடன் சோகத்தை கடலோர கிராம மக்கள். தாங்கி நிற்கின்றனர். உயிர்களை, உடைமைகளை இழந்த சொந்தங்களின் உள்ளங்களில் இன்னும் ஆறாத ரணமாக இருந்து கொண்டிருக்கும் இந்த கோர நிகழ்வு மறைய காலத்திடம் மட்டுமே மருந்திருக்கிறது. காலம் கடந்து செல்ல, அந்த காயமும் ஆறட்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com