

சென்னை,
சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 17). இவர் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கடற்கரைக்கு செல்ல ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து கடந்த 23-ந்தேதி சபரிநாதன் தனது பள்ளி நண்பர்களான விமல், தர்மராஜன், சல்மான், சக்திவேல், ஆகாஷ் ஆகியோருடன் மெரினாவில் குளிக்க சென்றார்.
நண்பர்கள் 6 பேரும் குதூகலமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சபரிநாதன், விமல், தர்மராஜன் ஆகிய 3 பேரும் சிக்கி மாயமானார்கள். தகவல் அறிந்து அண்ணாசதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினரும் சம்பவ இடம் விரைந்து அலையில் சிக்கி மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் பணி நேற்று 5-வது நாளாக நீடித்தது. ஆனாலும், கடலில் மாயமான 3 மாணவர்களின் நிலை இதுவரை தெரியவில்லை. எனவே, அவர்கள் பற்றி தகவல் கிடைத்தாலோ, அவர்களது உடல் ஏதேனும் கடற்கரையில் ஒதுங்கினாலோ அதுகுறித்த தகவலை உடனே தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கடலோர காவல்படை போலீசாரிடம் அண்ணாசதுக்கம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.