தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு

தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு
Published on

தச்சங்குறிச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருக உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டமாக ஆண்டு தோறும் ஜனவரி 1-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

கடந்தாண்டு ஜல்லிக்கட்டு குறித்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்ததன் காரணமாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக சென்ற ஆண்டு ஜனவரி 13-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஜல்லிக்கட்டு குழுவினர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடமும், கால்நடை துறையினரிடம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தும் அரசின் அனுமதி கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு குழுவினர் அரசு கூறி இருந்த கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த முன்னேற்பாடுகளை செய்து முடித்து ஜல்லிக்கட்டுக்கான அரசாணைக்காக காத்திருந்தனர். தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்த முதல் 300 மாடுகளுக்கும், 270 மாடுபிடி வீரர்களுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட கால்நடை துறை அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை சரிவர செய்து முடிக்காத காரணத்தால் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க முடியாது என்று கலெக்டர் கவிதாராமு கூறினார். மேலும் வேறு ஒரு தேதிக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com