

சென்னை,
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் வழக்கறிஞர் கு.பாரதி தலைமையில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போராட்ட வழக்குகளை திரும்பப் பெறுதல், பெண் தொழிலாளர்களுக்கான கழிவறை வசதியை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். தங்களது வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க முன்னெடுத்துள்ள தூய்மைப் பணியாளர்களின் இந்த அறப்போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவளிக்கிறது.
நமது சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும், தூய்மைக்கும் தங்களின் இன்னுயிரையும், உழைப்பையும் அர்ப்பணித்து வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. அவர்களை வெறும் 'முன்னணிப் பணியாளர்கள்' என்று வாய்வார்த்தையாகப் பாராட்டுவதோடு நிறுத்திவிடாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை முறைப்படுத்தி சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.
குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்போதைய கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப, அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற நியாயமான ஊதிய உயர்வை அரசு உடனே அறிவிக்க வேண்டும். மேலும், தங்களின் உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் ஜனநாயக முறையில் போராடிய தொழிலாளர்கள் மீது பதியப்பட்ட போராட்ட வழக்குகளை தமிழக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
அத்தோடு, பணியில் இருக்கும் பெண் தொழிலாளர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கான பாதுகாப்பான கழிவறை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும். சமூகத்தின் அடித்தட்டு மக்களாக இருக்கும் இத்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. தூய்மைப் பணியாளர்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்ய, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, போராடும் தொழிலாளர்களை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.