

உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்போம் என மாநில சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கேக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் பத்மஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் வன்னி அரசு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆளுங்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ யாராக இருந்தாலும், யாருடைய அழுத்தத்திற்கும் கட்டுப்படாமல் சட்டத்திற்கு உட்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜா நேர்மையாகப் பணியாற்றி வருகிறார்.
ஆட்சி நிர்வாகத்தில் என்ன சொல்லி கொடுக்கிறார்களோ அதை செய்கிறோம் என்று சொல்கிற நேர்மையான கலெக்டர். அதனால் அவர் மீது அவதூறு பரப்புவது, ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குவது என்பது பொது வாழ்க்கையில் இருக்கிற பெண்களை மேலும் செயல்படவிடாமல் செய்யும்.
பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் மீது அல்லது அரசுப் பணியில் இருக்கின்ற பெண்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்போம். அந்த அடிப்படையில் நாங்கள் எப்போதும் நீதியின் பக்கம் நிற்கக்கூடியவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.