

சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சார மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம், பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ஏஐ உழவர் செயலி’ போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றாலும், எல்நினோ தாக்குதல் தமிழ்நாட்டில் பாதிப்பை உருவாக்கும் என வானிலை ஆய்வுகள் கூறியுள்ள நிலையில் அதை எதிர்கொள்ள எந்த திட்ட அறிவிப்பும் இல்லை.
மழை நீர் சேமிப்பு திட்டம், தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்புகளும் இல்லை. குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. நெல் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் உள்ளது. அது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. ஐந்து இடங்களில் வேளாண்மை பொறியியல் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது.
பட்ஜெட்டில், விவசாய தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிப்புகள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, 5 ஏக்கர் நிலம் வரை உள்ள விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வது, மற்ற விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி என்பதை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வரும் நிலையில், அது பற்றிய அறிவிப்பு இல்லாதது, விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.