

சென்னை,
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கபிலக்குறிச்சி கிராம பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர் ஆகியோர் தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்தனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியதால், என் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டித்துவிட்டனர். நான் பொது குடிநீர் குழாயில் இருந்து மின்சார மோட்டாரை பயன்படுத்தி வீட்டுக்கு தண்ணீர் எடுத்ததாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து நான் கொடுத்த புகார் மனுவை விசாரித்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடந்த 2012-ம் குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிட்டும், இணைப்பு வழங்கவில்லை. எனவே, எனக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
பொதுமக்கள் பாதிப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் வீட்டுக்கு தற்போது குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதாக அரசு வக்கீல் கூறினாலும், மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு தீவிரமானது. மோட்டார் மூலம் பொது குடிநீர் வினியோக குழாயில் இருந்து குடிநீரை எடுத்தால், பிறர் வீட்டுக்கு குடிநீர் வராது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதுபோன்ற குற்றச்சாட்டில் கருணை காட்டக்கூடாது.
அதேபோல, நில அபகரிப்பு குற்றத்தில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொட்டைக் கடிதம்
மனுதாரர், கிராம பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர் மீது நில அபகரிப்பு புகார் கூறுகிறார். இதுபோன்ற புகாரை காலம் தாழ்த்தாமல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இதுபோன்ற குற்றத்தைச் செய்தால், அது சமுதாயத்துக்கு எதிராக அவர்கள் செய்யும் குற்றமாகும்.
ஆனால் அச்சத்தின் காரணமாக, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளை, பொதுமக்கள் கேள்வி கேட்பது இல்லை. செல்வாக்குமிக்கவர்களுக்கு எதிராக சாதாரண மக்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால், இந்த குற்றச்செயல் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, நில அபகரிப்பு உள்ளிட்ட கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக மொட்டைக் கடிதம் வந்தால்கூட அதன் அடிப்படையில் அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.
ஐனநாயகத்துக்கு அச்சுறுத்தல்
போலீஸ் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள சில அதிகாரிகள், நில அபகரிப்பில் ஈடுபடும் அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றனர். அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் போலீஸ் அதிகாரிகள் கருணை காட்டாமல், கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். நில அபகரிப்பு குற்றம் என்பது ஆபத்தானது மட்டுமல்ல, அது ஜனநாயகத்தை அச்சுறுத்தும் செயலாகும்.
இந்த வழக்கில் மனுதாரர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே, அதிகாரிகளின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும்விதமாக ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்பதை ஏற்க முடியாது. மேலும், மனுதாரர் மீதான குற்றச்சாட்டு, பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகியவை குறித்து அரசு விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை முடித்துவைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.