ஹெலிகாப்டரின் கடைசி பயண காட்சி சுற்றுலா பயணி எடுத்த வீடியோவால் பரபரப்பு

பனி மூட்டத்துக்குள் மறைந்த ஹெலிகாப்டரின் கடைசி பயண காட்சியை சுற்றுலா பயணி வீடியோ எடுத்து இருந்தார். அந்த காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹெலிகாப்டரின் கடைசி பயண காட்சி சுற்றுலா பயணி எடுத்த வீடியோவால் பரபரப்பு
Published on

கோவை,

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்து நடந்த சில நிமிடங்களுக்கு முன்பு குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் உள்ள ரன்னிமேடு ரெயில் நிலைய தண்டவாளம் பகுதியை சில சுற்றுலா பயணிகள் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள், அந்த வழியாக வானில் பறந்த ஹெலிகாப்டரை வீடியோ எடுத்தனர்.

வீடியோ வைரல்

20 வினாடிகள் உள்ள அந்த வீடியோவில் ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து செல்கிறது. பின்னர் சில வினாடிகளில் பனி மூட்டத்தில் அது மறைந்தது. அப்போது திடீரென்று பலத்த சத்தம் கேட்கிறது. அதை கேட்டதும், சுற்றுலா பயணிகளில் ஒருவர் ஹெலிகாப்டர் விழுந்து விட்டதா என்று கூறுகிறார். தொடர்ந்து அந்த வீடியோ முடிவடைகிறது.

20 வினாடிகள் வீடியோ ஓடினாலும் அதில் ஹெலிகாப்டர் வருவதும், அது பனி மூட்டத்தில் மறைந்து செல்லும் காட்சியும் 6 வினாடிகளில் முடிந்து விடுகிறது. அந்த ஹெலிகாப்டர்தான் விபத்துக்கு உள்ளானது என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கடைசி பயண வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

13 மரங்கள் முறிந்தன

60 டிகிரி வரை சாய்வாக உள்ள அந்த மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் ஹெலிகாப்டர் மோதிய வேகத்தில் 13 மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. இதுதவிர ஒரு சிமெண்டு மின்கம்பம் உடைந்து உள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு ஹெலிகாப்டரில் 5 நிமிடங்களுக்குள் சென்று விட முடியும். எனவே தரையிறங்க வேண்டிய நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com