

சென்னை,
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நாளை நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தன. இந்த முற்றுகை போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்து உத்தரவிட்டதுடன், மனு தொடர்பாக வரும் 11ந்தேதி பதிலளிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த நிலையில், எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றம் விதித்த தடை எங்களுக்கு பொருந்தாது. அதனால் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
இதன்படி, தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் தெரிவித்து உள்ளார்.