சிறையில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சாராய வியாபாரி

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெற்றிபெற்ற சாராய வியாபாரியை, பதவி ஏற்க அனுமதிக்க கோரி அவரது மனைவி கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
சிறையில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சாராய வியாபாரி
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). இவர் மீது சாராயம் விற்பனை செய்ததாக வாணியம்பாடி டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கிருஷ்ணன், ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சி 9-வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணனுக்கு சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இவரை எதிர்த்து அதே வார்டில் 4 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி லாலாஏரி பகுதியில் லாரி டியூப்கள் மற்றும் கேன்களில் 150 லிட்டர் சாராயத்தை மறைத்து வைத்திருந்ததாக கிருஷ்ணனை வாணியம்பாடி தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேர்தலில் வெற்றிபெற்றார்

கடந்த 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்ததில் பதிவான 373 வாக்குகளில், கிருஷ்ணன் 194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி ராஜேஸ்வரி குடும்பத்தினருடன் சென்று நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் என் கணவர் சாராயம் விற்பனை செய்து தற்போது மனம் திருந்தி வாழ்ந்து வருவதாக 22.9.2021 அன்று தபால் மூலம் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார்.

அனுமதிக்க வேண்டும்

தற்போது காவல் துறையினர் பொய் வழக்குப்போட்டு அவரை சிறையில் அடைத்துள்ளனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் வார்டு உறுப்பினராக பதவி ஏற்க அனுமதித்து தக்கவழி செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கிலிருந்து அவரை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் கூறிஉள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com