சிவகாசியில் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் இருப்பிடமே தெரியாமல் இருந்தது; இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும் - அமைச்சர் கீர்த்தனா

சிவகாசியில் வெடி விபத்துகளை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் இருப்பிடமே தெரியாமல் இருந்தது; இனி 24 மணி நேரமும் திறந்திருக்கும் - அமைச்சர் கீர்த்தனா
Published on

மதுரை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் கீர்த்தனா, 68,709 வாக்குகளைப் பெற்று, 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, கடந்த 10-ந்தேதி தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார். அன்றைய தினமே, கீர்த்தனா உள்பட 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், சிவகாசி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான கீர்த்தனா, மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“நான்தான் சிவகாசியின் முதல் பெண் எம்.எல்.ஏ. என்று சொல்கிறார்கள். ஆனால், அதைவிட சிவகாசியின் சிறந்த எம்.எல்.ஏ. என்ற பட்டத்தை வாங்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இதுவரை சிவகாசியில் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் இருப்பிடமே தெரியாமல் இருந்தது.

தெரியாதவர்களுக்காக சொல்கிறேன், கோர்ட்டு பக்கத்தில்தான் எம்.எல்.ஏ. அலுவலகம் இருக்கிறது. கடைசி 5 வருடங்களாக அலுவலகத்தை திறக்கவே இல்லை. நாங்கள்தான் அதை திறந்து, சுத்தம் செய்து தயார்படுத்தியுள்ளோம். இனி, 24 மணி நேரமும் மக்கள் பணிக்காக எம்.எல்.ஏ. அலுவலகம் திறந்திருக்கும்.

சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கும்போது சான்றிதழை கொண்டு செல்ல மறந்துவிட்டேன் என்று சொல்கிறார்கள். ஆனால் சான்றிதழ் எல்லாம் என்னிடம்தான் இருந்தது. மறதி என்றெல்லாம் தவறாக எழுதுகிறார்கள், அதை தவிர்த்திருக்கலாம்.

சிவகாசியில் வெடி விபத்துகளை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்படும் என எனது தேர்தல் வாக்குறுதியிலேயே நான் சொல்லியிருந்தேன். அதற்கான பணிகளை செய்து வருகிறோம். இதுவரை யாரும் இதுபோல் கமிட்டி அமைக்கவே இல்லை. இந்த கமிட்டியில் நிபுணர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், அதுமட்டுமின்றி தொழிலாளர்களும் இடம்பெறப் போகிறார்கள். அனைவரும் சேர்ந்து கலந்தாய்வு செய்து முடிவு எடுக்கப்போகிறார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com