பக்கிங்காம் கால்வாய் மேம்பால தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி

பக்கிங்காம் கால்வாய் மேம்பால தடுப்பு சுவரில் மோதி டிரைலர் லாரி அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பக்கிங்காம் கால்வாய் மேம்பால தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி
Published on

மீஞ்சூரை அடுத்த எண்ணூர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கி விட்டு டிரைலர் லாரி ஒன்று வடசென்னை அனல் மின் நிலையம் வழியாக வந்துக்கொண்டிருந்தது. லாரியை எர்ணாவூரை சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டி வந்தார்.

பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ரபீக், முன்னால் சென்ற லாரி மீது மோதாமல் இருக்க லாரியை இடதுபுறமாக திருப்பினார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த டிரைலர் லாரி, மேம்பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பாய்ந்தது.

இதில் லாரியின் முன்பகுதி பாலத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கியது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ராட்சத ஏணியை கொண்டு மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கிய லாரியில் சிக்கி தவித்த டிரைவர் ரபீக்கை பத்திரமாக மீட்டனர். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கிய லாரியை லாவகரமாக மீட்டனர்..

இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com