திருப்பரங்குன்றம் தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு


திருப்பரங்குன்றம் தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
x

திருப்பரங்குன்றம் தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். அதன்படி அங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவும், தீபத்தூணும் அருகருகே இருப்பதாக கூறியும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் அரசு அதிகாரிகள் தரப்பில் தீபத்தூணில் தீபம் ஏற்ற மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள், பா.ஜனதாவினர் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பான வழக்கும் மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழாவின்போது ஆடு, கோழி பலியிட தடைகோரி சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மலை மீது உயிர் பலியிடவோ, அசைவ உணவு பரிமாறவோ கூடாது என ஏற்கனவே தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது எனவும் கந்துரி விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, கந்தூரி விழாவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தர்கா நிர்வாகத்தின் மேலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை ஜனவரி 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் அதுவரை தற்போதைய நிலையே தொடர உத்தரவிடக்கோரிய மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

1 More update

Next Story