மதுரை தவெக மாநாடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது - பொதுச்செயலாளர் ஆனந்த்

தென்தமிழ்நாட்டில் பெரிய கூட்டத்தை கூட்டி காட்டி உள்ளோம் என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், மாநாட்டின் நிகழ்வுகள் 1 மணிநேரம் முன்னதாகவே தொடங்கின. மாநாட்டு மேடைக்கு விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபா, த.வெ.க. மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மாநாட்டின் தொடக்கத்தில் நாட்டுப்புற இசையுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் மீது நடந்து சென்று தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து 40 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார். இதையடுத்து த.வெ.க. நிர்வாகிகள் உரையாற்றினார். அந்த வகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தொடக்கவுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை தவெக மாநாடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. தென்தமிழ்நாட்டில் பெரிய கூட்டத்தை கூட்டி காட்டி உள்ளோம். தமிழ்நாடே அதிர்ந்துவிட்டது; மதுரையில் நடைபெறும் இந்த மாநாடு வலுவான எதிர்காலத்திற்கு அடித்தளம். தவெக தொண்டர்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






