‘மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது’ - ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு

பா.ம.க. தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
‘மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது’ - ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

பா.ம.க., சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவைகளை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்த தடை கேட்டு அவரது தந்தை டாக்டர் ராமதாஸ், சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்காததால், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, டாக்டர் ராமதாஸ் வழக்கிற்கு பா.ம.க. பொதுச்செயலாளர் தடை உத்தரவு பெற்றார்.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு. "ஐகோர்ட்டு உத்தரவில் தவறு இல்லை. அதேநேரம். மாம்பழம் சின்னம் உரிமை தொடர்பான வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்கும்படி சென்னை உரிமையியல் கோர்ட்டில் ராமதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், வழக்கை 3 நாட்களுக்குள் விசாரித்து உரிமையியல் கோர்ட்டு தீர்ப்பு அளிக்கவேண்டும்" என்று உத்தரவிட்டது.

இதன்படி, ராமதாஸ் தரப்பில் உரிமையியல் கோர்ட்டில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தர்மபிரபு, மனுவின் நகலை அன்புமணி தரப்புக்கு வழங்க வேண்டும் என கூறி இந்த வழக்கு புதன்கிழமை(நேற்று) விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி பதிலளிக்க உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் வியாழக்கிழமை(இன்று) இருதரப்பு வாதங்களும் கேட்கப்படும் என்று உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்ம பிரபு தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “இந்த வழக்கு தந்தை - மகனுக்கு இடையே உள்ள பிரச்சினை. மாம்பழம் சின்னத்தை தற்போதைய நிலையில் முடக்க முடியாது. தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால், இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது. புதுச்சேரியில் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது” என்று வாதிட்டார்.

அன்புமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத் ஆஜராகி, “பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர். இது தந்தை - மகனுக்கு இடையேயான பிரச்சினை மட்டுமே. ஆனால் அதை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி தர்மபிரபு, ‘மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது’ என்று தெரிவித்து ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பா.ம.க. தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்ற ராமதாஸ் தரப்பின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com