பிரசாரத்துக்கு சென்ற பா.ஜனதா வேட்பாளரை தடுத்த விவகாரம்:மாமன்னன் படக்காட்சிகளை குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்த நீதிபதி

பிரசாரத்துக்கு சென்ற பா.ஜனதா வேட்பாளர் தடுக்கப்பட்ட விவகாரத்தில் மாமன்னன் படக்காட்சிகளை குறிப்பிட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
பிரசாரத்துக்கு சென்ற பா.ஜனதா வேட்பாளரை தடுத்த விவகாரம்:மாமன்னன் படக்காட்சிகளை குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்த நீதிபதி
Published on

பிரசாரத்துக்கு சென்ற பா.ஜனதா வேட்பாளர் தடுக்கப்பட்ட விவகாரத்தில் மாமன்னன் படக்காட்சிகளை குறிப்பிட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

வேட்பாளர் பிரசாரம்

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக கருப்பு முருகானந்தம் போட்டியிட்டார். அவர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மல்லிப்பட்டினத்துக்கு பிரசாரம் செய்யச் சென்றார்.அப்போது அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் சேதமடைந்த எந்திர படகுகள், வாகனங்களுக்கு இழப்பீடு மற்றும் நீதி விசாரணை கோரி ஹபீப்முகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு எம்.எல்.ஏ. ஆக வருவார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார். அவரை தேர்தலில் வீழ்த்த எதிர்தரப்பினர் வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்துவார்கள். அதனால் வடிவேலு, பிரசாரத்துக்கு செல்ல முடியாது. அவரை கிராமங்களுக்குள் விடாமல் தடுத்துவிடுவார்கள். அதிர்ஷ்டவசமாக அவருக்கு தொழில்நுட்பம் கைகொடுக்கும். சமூக வலைத்தளங்கள் வழியாக அவர் வாக்காளர்களை சென்றடைவார்.

அதே போன்று பிரசாரங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலையை 2014-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கருப்பு முருகானந்தம் சந்தித்து உள்ளார்.

சட்டப்படி குற்றம்

சம்பவத்தன்று அவர் மல்லிப்பட்டினத்துக்கு பிரசாரத்துக்கு சென்றபோது அவரை முஸ்லிம்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். தேர்தலில் ஓட்டு போடுவது சட்டப்படியான உரிமை. அதுபோல வாக்கு சேகரிப்பதும் அடிப்படை உரிமை. தேர்தலில் போட்டியிடுபவர்கள் பல்வேறு வழிகளில் வாக்குகளை சேகரிக்கின்றனர். கட்சிகளும், வேட்பாளர்களும் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி வாக்குகளை சேகரிக்கின்றனர்.

இவற்றை தடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம். வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க உரிமை உண்டு. அவர்களால் அமைதியான முறையில் வாக்கு கேட்கவும், எந்த இடத்துக்கும் செல்லவும் முடியும். இதை தடுக்க எந்த தனிநபர்களுக்கும் உரிமையில்லை. தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. சுதந்திரமான, வலுவான பிரசாரம் இல்லாவிட்டால் தேர்தல் என்பது கேலி கூத்தாகிவிடும். வேட்பாளர்கள், கட்சிகளை பிரசாரம் செய்யவிடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

தள்ளுபடி

இந்த வழக்கில் சில சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்கும்படி அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட முடியும். அதற்கு முன்னதாக உண்மையை ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள், எதிர் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது சம்பந்தமாக கீழ்கோர்ட்டுதான் முடிவு எடுக்க முடியும். எனவே மனுதாரர் தனது கோரிக்கை குறித்து கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com