கடன் கொடுத்தவர்கள் மிரட்டியபோது வியாபாரி மயங்கி விழுந்து சாவு; வடமதுரை அருகே பரபரப்பு

வடமதுரை அருகே கடன் கொடுத்தவர்கள் மிரட்டியபோது வியாபாரி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடன் கொடுத்தவர்கள் மிரட்டியபோது வியாபாரி மயங்கி விழுந்து சாவு; வடமதுரை அருகே பரபரப்பு
Published on

வடமதுரை அருகே உள்ள எஸ்.புதுப்பட்டியை சேர்ந்தவர் கருஞ்சாமி (வயது 63). புளி வியாபாரி. இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒருசிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திரும்ப செலுத்தாததால் இன்று காலை கடன் கொடுத்தவர்கள் கருஞ்சாமியை குரும்பபட்டிக்கு அழைத்து சென்றனர். மேலும் அங்குள்ள ஒரு கடையில் அவரை உட்கார வைத்து கடனை திரும்ப கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

அப்போது கருஞ்சாமி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனை சென்று வருவதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் அவரை அங்கிருந்து செல்ல அனுமதிக்க மறுத்து, அங்கேயே உட்கார வைத்திருந்தனர். சிறிது நேரத்தில் கருஞ்சாமி அங்கேயே மயங்கி விழுந்து இறந்துபோனார். இதனை அறிந்த கருஞ்சாமியின் உறவினர்கள் குரும்பபட்டியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகசாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கருஞ்சாமியை அழைத்து வந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி கருஞ்சாமியின் உறவினர்கள் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். பின்னர் கருஞ்சாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com