மகளிர் உரிமைத்துறை அமைச்சரோ பெயர் பலகைக்கு சண்டையிட்டு கொண்டிருக்கிறார்- நயினார் நாகேந்திரன்

தவெக ஒரு மாற்று சக்தி இல்லை, ஏமாற்று கோஷ்டி மட்டுமே என்பது இன்று தெளிவாகிவிட்டது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பெண்கள் பாதுகாப்பை களவாடும் ஆச்சரியக்குறிகளும், விளம்பரத்திற்கு தவிக்கும் தவெக அமைச்சர்களும்! ஒருபுறம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தவெக பேரூராட்சி இணை செயலாளர் தொந்தரவு செய்ததாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சி அளிக்கும் வேளையில், மறுபுறம் அதே விருதுநகர் மாவட்டத்தில் அரசு விழா மேடையில் தன் பெயர் ஏன் முதலில் இல்லை என மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கடிந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

பஞ்ச் வசனம் பேசுவது

சிறுமியை திருமணம் செய்வது, பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுவது என தவெகவின் ஆச்சரியக்குறிகள் ஒருபுறம் பெண்கள் பாதுகாப்பைப் பறிக்கும் வேளையில், முதல்-அமைச்சர் விஜய் செல்போனில் வீடியோ எடுப்பது, பஞ்ச் வசனம் பேசுவது என பொழுதைப் போக்கி கொண்டிருக்கிறார். தமிழக பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விடுத்து, மகளிர் உரிமைத்துறை அமைச்சரோ பெயர் பலகைக்கு சண்டையிட்டு கொண்டிருக்கிறார்.

மாற்று சக்தி இல்லை

இது குதிரைவேக அரசா அல்லது விளம்பர மோக அரசா என தமிழக மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை! ஒன்று மட்டும் நிச்சயம்! ஒட்டுமொத்தத்தில், தவெக ஒரு மாற்று சக்தி இல்லை, ஏமாற்று கோஷ்டி மட்டுமே என்பது இன்று தெளிவாகிவிட்டது!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com