

மதுரை,
தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மதுரையில் இன்று (வெள்ளிகிழமை) காலமானார். அவருக்கு வயது 90.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு சாலமன் பாப்பையா பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
மதுரை அரசடியில் உள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சாலமன் பாப்பையா, தனியார் தொலைக்காட்சியின் பட்டிமன்றங்களில் நடுவராகப் பொறுப்பேற்று பேசி வந்தார். அவரது பேச்சுக்குப் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. பட்டிமன்றங்கள் மற்றும் பொது மேடைகளில் நகைச்சுவை கலந்து சாலமன் பாப்பையா பேசி வந்தார். அவரது பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்படப் பல நாடுகளில் பட்டிமன்றங்களை நடத்தி வந்தார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் சாலமன் பாப்பையா பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பட்டிமன்றத்தை சாலமன் பாப்பையா நடத்தி வந்தார். பட்டிமன்றங்களில் இரு தரப்பினரும் முன்வைக்கும் கருத்துகளை நகைச்சுவை கலந்து பகுப்பாய்ந்து அவர் அளிக்கும் தீர்ப்புகள் வரவேற்பைப் பெற்றன.
நடுவராக மட்டுமன்றி எழுத்தாளராக 'புறநானூறு புதிய வரிசை வகை', 'பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை', 'திருக்குறள் உரையுடன்' என பல்வேறு நூல்களை சாலமன் பாப்பையா எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை சாலமன் பாப்பையா பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு முத்தமிழ்ப் பேரரறிஞர் என்ற விருதை அண்ணாமலை பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது.
இதுதவிர 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சாலமன் பாப்பையா, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக கடந்த 5ஆம் தேதி சிவகாசியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார். தனது பேச்சை தொடங்கும்போது "அன்பு பெரியோர்களே.. அருமை தாய்மார்களே.." என்று அவர் கூறுவது அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
இந்நிலையில் சாலமன் பாப்பையாவின் உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.