பிரசவித்த தாய் மரணம்: குழந்தையும் சிகிச்சை பலனின்றி இறந்ததால் ஆஸ்பத்திரி முற்றுகை

வேலூர் அருகே பிரசவித்த தாய் இறந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.
பிரசவித்த தாய் மரணம்: குழந்தையும் சிகிச்சை பலனின்றி இறந்ததால் ஆஸ்பத்திரி முற்றுகை
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். அவரது மனைவி மகேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில், மகேஸ்வரி மீண்டும் கர்ப்பமானார். அதைத் தொடர்ந்து அவர் பிரசவத்திற்காக காங்குப்பத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பரிசோதனை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி மகேஸ்வரி பிரசவத்திற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

மகேஸ்வரிக்கு தைராய்டு உள்ளிட்ட சில பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந்தேதி மகேஸ்வரி இறந்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து குழந்தையை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் குழந்தையும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரியின் மாமனார் ஜெயக்குமார் ஆரம்பத்தில் பரிசோதனை செய்த காங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களை அணுகி மகேஸ்வரிக்கு பரிசோதனை செய்த விவரங்களை கேட்டார். அப்போது மருத்துவர்கள் நாளை (இன்று) தருவதாக கூறினர்.

ஆனாலும் ஜெயக்குமார், உறவினர்களுடன் சென்று நேற்று இரவு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com