

நீலகிரி,
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணி அளவில் புறப்படும் மலை ரெயில், குன்னூர் ரெயில் நிலையத்திற்கு காலை 10.15 வந்து சேரும். நேற்று புறப்பட்ட மலை ரெயிலில் உந்து சக்தி குறைவு காரணமாக, 3 மணிநேரம் தாமதமாக மதியம் 1.45 மணிக்கு குன்னூர் ரெயில் நிலையம் வந்தடைந்தது. இதன் காரணமாக மலை ரெயில் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் உந்து சக்தி குறைவு காரணமாக ஹில்கிரோ, ரன்னிமேடு போன்ற ரெயில் நிலையங்களில் காலதாமதமாக ரெயில் வந்தடைந்தது. இதனால் மலை ரெயிலில் பயணித்த குழந்தைகள், சிறுவர்கள் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
நீலகிரி மலை ரெயில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றுள்ள மலை ரெயிலாகும். இந்த மலை ரெயிலை சிறந்த முறையில் பராமரித்து சுற்றுலாப் பயணிகள் சிரமம் இன்றி வந்து செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். தற்போது உள்ள என்ஜின்கள் பழைய முறைப்படி இயக்கப்பட்டு வருகிறது. கூடுதல் உந்து சக்தி கொண்ட புதிய ரெயில் என்ஜின்களை உருவாக்கி ரெயில் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ரெயில் தாமதத்தால் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைந்து செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.