தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் - பிரேமலதா

தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த அரசு உதவி செய்திட வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
பிரேமலதா விஜயகாந்த்
Published on

சென்னை,

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல்

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும். இது தொழிலாளர்களை நிரந்தர வேலையின்மை, வருமான இழப்பு மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. தனியார்மயமாக்கல் நடைமுறை தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ESI, PF உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் பணிப்பாதுகாப்பு வசதிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மேலும், ஊதியக் குறைப்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளும் உருவாகக்கூடும். மக்களின் சுகாதாரத்திற்கும், நகரங்களின் தூய்மைக்கும் முக்கிய பங்காற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே, மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அத்துடன், தற்போது பணியாற்றி வரும் ஒப்பந்த மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிடவும், அவர்களின் ஊதியத்தை உயர்த்திடவும், தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.

உதவி செய்திட வேண்டும்

“சுத்தம் தான் சோறு போடும்” என்ற பழமொழிக்கேற்ப, சுத்தம் செய்வதையே தங்களது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு இருக்கும் தூய்மை பணியாளர்கள் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் நலனிற்கும் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவர்கள் தினமும் பொதுமக்கள் வாழும் சூழலை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க கடினமாக உழைக்கின்றனர். எனவே தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த அரசு உதவி செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com