நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில்


நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில்
x
தினத்தந்தி 6 July 2025 10:45 PM IST (Updated: 6 July 2025 11:22 PM IST)
t-max-icont-min-icon

மகா கும்பாபிஷேக விழாவையொட்டி திருச்செந்தூர் நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடக்கிறது.

இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.மேலும், ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 1-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2 நாட்களாக தங்க முலாம் பூசப்பட்ட சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்பட விமான கோபுர கலசங்கள் விமானதளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதில் வரகு நிரப்பப்பட்டு மீண்டும் அந்தந்த சுவாமி விமானத்தில் பொருத்தப்பட்டன. நேற்று காலை 8-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 9-ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதுதவிர மாலையில் சுவாமி பெருமாளுக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு இன்று காலை 10-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதேநேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

பக்தர்கள் எந்தவித நெருக்கடி இன்றி விழாவை காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்காக டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 20 டிரோன்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளன.

பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதற்காக திருச்செந்தூரில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில்,நாளை கோலாகலமாக நடைபெறவுள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கிறது. வாண வேடிக்கை கண்களைக் கவர்ந்தது. திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் மின்விளக்குகளால் ஜொலிஜொலிக்கிறது. திருச்செந்தூர் நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உள்ளூர்,வெளியூர் மக்கள் என திருச்செந்தூரை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

1 More update

Next Story