'பெயர் பரபரப்பாக பேச வேண்டும்' - சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி...!

கும்பகோணம் அருகே சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
'பெயர் பரபரப்பாக பேச வேண்டும்' - சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி...!
Published on

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 38). இவர் 2017-ம் ஆண்டு முதல் இந்து முன்னணி மாநகரச் செயலாளராக உள்ளார். இவர் தனது மனைவி மாலதி, மகன் இனியன் ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் வெளியே திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் சக்கரபாணி எழுந்து வெளியே சென்று பார்த்தபோது வாசலில், பெட்ரோல் பாட்டில், திரியுடன் உடைந்த நிலையில் கிடந்தது. இது குறித்து சக்கரபாணி கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் கும்பகோண கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசியது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி மீது சந்தேகம் கொண்டு போலீசார் அவரிடம் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தனர். அதில் ஒரு அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி கும்பகோணத்தில் தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிவந்துள்ளது. 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து சக்கரபாணியை போலீசார் கைது செய்தனர் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com