‘உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர் அரசு மருத்துவமனை கல்வெட்டில் பதிக்கப்படும்’ - மா.சுப்பிரமணியன்

ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் கல்வெட்டு பதிக்கும் திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வைரவிழா, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுகுமார் முன்னிலை வகித்தார். மருத்துவ கல்லூரி டீன் ரேவதிபாலன் வரவேற்று பேசினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வைர விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“தமிழ்நாட்டில் குக்கிராமங்கள், மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள், இதய பாதிப்புக்கு ‘கோல்டன் ஹவர்ஸ்' என்பதன் மூலம் சிகிச்சை பெறுவதற்காக 3 வகையான மருந்துகளில் 14 மாத்திரைகளை ஒரே நேரத்தில் தந்து உயிர் காக்கும் வகையில் ‘இதயம் காப்போம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதுவரை இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நான் தற்போது ஆய்வு செய்து வந்த வல்லநாடு சுகாதார நிலையத்தில் இந்த திட்டத்தின் மூலம் 26 பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த திட்டத்தால் உயிர் பிழைத்தோம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் இதுவரை 2 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மருத்துவ திட்டங்களுக்காக ஐ.நா. பொதுச்சபையின் விருது கிடைத்துள்ளது.
உடல் உறுப்பு தானம் திட்டத்தில் தமிழகம் தொடர்ந்து அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த அனைவரின் பெயர்களும் அடங்கிய கல்வெட்டு ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் பதிக்கும் திட்டம் சென்னையில் அடுத்தவாரம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. நெல்லை மருத்துவக்கல்லூரியிலும் அதுபோன்ற கல்வெட்டு அமைக்கப்படும்.”
இவ்வாறு அவர் பேசினார்.






