கன்னியாகுமரி: 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி சூறைக்காற்றில் சேதம்..!

கன்னியாகுமரியில் 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி சூறைக்காற்றில் சேதமடைந்தது.
கன்னியாகுமரி: 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி சூறைக்காற்றில் சேதம்..!
Published on

கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் மகாதானபுரம் ரவுண்டானாவில் ரூ.75 லட்சத்தில் 150 அடி உயர கொடிக்கம்பத்தில் பிரமாண்டமான தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

நேற்றுமுன்தினம் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தேசியக்கொடி 32 அடி அகலமும், 42 அடி நீளமும் கொண்டது. இந்த தேசியக்கொடி ஆண்டின் அனைத்து நாட்களும் இரவு, பகலும் பறக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலையில் கன்னியாகுமரி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இந்த காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தேசியக்கொடியின் ஓரம் கிழிந்து சேதமடைந்துள்ளது. இதை கவனித்த அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "150 அடி உயர கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி சேதமானது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திருச்சியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த கொடியை பத்திரமாக கீழே இறக்கினர்.

இதையடுத்து அந்த பகுதியில் வீசும் காற்றின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்தபின், தற்போது உள்ள கொடியின் நீளம், அகலத்தை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு, 15 நாட்கள் கழித்து மீண்டும் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com