

சென்னை,
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'ஜி.டி.என்.' என்ற பெயரில் நடிகர் மாதவன் நடிப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள டிரைகலர் பிக்சர்ஸ் மற்றும் தினத்தந்தி குழுமம் இணைந்து நடத்தும் 'தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்' போட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் புதுமை கண்டுபிடிப்புகளுக்காக நடத்தப்பட்டது.
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்று, பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் புதுமையான யோசனைகள் மற்றும் செயல்திறன் மிக்க திட்டங்களை சமர்ப்பிக்க அழைக்கப்பட்டனர்.
பதிவு செய்யும் கடைசி நாள் ஜூன் 21-ந் தேதியாக இருந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 165 பொறியியல் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 779 கண்டுபிடிப்புகள் பெறப்பட்டன. இது மாணவர்களின் புதுமை சிந்தனை மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாக அமைந்தது.
கண்டுபிடிப்புகளை வெளிப்படையாகவும், துல்லியமாகவும் மதிப்பீடு செய்வதற்காக 10 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அனைத்து கண்டுபிடிப்புகளையும் விரிவாக ஆய்வு செய்து, சிறந்த 36 கண்டுபிடிப்புகளை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்துள்ளனர்.
மாணவர்கள் சமர்ப்பித்திருந்த கண்டுபிடிப்புகளின் தரம், புதுமை, சமூகப் பயன்பாடு மற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகள் ஆகியவை சிறப்பான நிலையில் இருந்ததால், தேர்வு செய்வது சவாலாக இருந்ததாக நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் இன்று நடைபெறும் அரையிறுதிச் சுற்றில் இந்த 36 அணிகள் தங்களது கண்டுபிடிப்புகளை விளக்குகின்றன. இதில் இருந்து 12 சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பிரமாண்டமான இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளன.
'தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்' போட்டி, பொறியியல் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முக்கிய மேடையாக மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் புதுமையான சிந்தனையை ஊக்குவிக்கும் சிறப்பான முயற்சியாக திகழ்கிறது. மாணவர்கள் வகுப்பறையை தாண்டி சிந்தித்து, சமூகத்திற்கு பயனளிக்கும் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அரையிறுதி சுற்று நடுவர்களாக ஸ்டெம் லேப் பொது மேலாளர் என்.ராம்ராஜ், வி.ஐ.டி. பேராசிரியர் நாராயணன் ஆகியோர் இருந்தனர்.