தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் தீவிரமாக கொரோனா பரவிவரும் சூழ்நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் இயங்கவும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். அதன்படி சென்னையில் போலீசார் தீவிர கண்கானிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், இரவு நேரங்களில் தொலைதூரம் இயக்கப்படும் பஸ்கள் செல்லாது. அதேநேரத்தில், நீண்டதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும். இந்த ரெயில்களில் பயணிக்க வரும் பயணிகள், வரும் வழியில் போலீஸ் சோதனை செய்யும் இடங்களில் உரிய டிக்கெட்டை காட்ட வேண்டும். அவ்வாறு காட்டும்பட்சத்தில், போலீசார் அவர்களை அனுமதிப்பார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com