சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்கிறது

புதிதாக 4 பேரை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்ததன் மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்கிறது. இந்த 4 பேரில் ஒருவர் பெண் என்பதால் பெண் நீதிபதிகள் நியமனத்தில் ஐகோர்ட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்கிறது
Published on

ஐகோர்ட்டு நீதிபதிகள்

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 56 பேர் பணியில் உள்ளனர். இதில், 13 பேர் பெண் நீதிபதிகள் ஆவர். 19 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிவரும் டி.பாரத சக்ரவர்த்தி, முகமது ஷபிக், மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீலாக பணியாற்றிவரும் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் ஆகிய 4 பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு (கொலிஜியம்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு ஒப்புதலுக்கு பின்பு இவர்களை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார்.

எண்ணிக்கை உயர்வு

இதன் மூலம் சென்னை ஐகோர்ட்டில் 60 நீதிபதிகள் பணியில் இருப்பர். காலி பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக குறையும். இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் சென்னை ஐகோர்ட்டில்தான் அதிகபட்சமாக 13 பெண் நீதிபதிகள் பணியாற்றிவருகின்றனர்.தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவர் பெண் என்பதால் இனி14 பெண் நீதிபதிகள் ஐகோர்ட்டில் பணியாற்றுவர். இது புதிய சாதனை ஆகும்.பாரத சக்ரவர்த்தி சென்னை ஐகோர்ட்டில் 27 ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றி வருகிறார். புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படித்த இவர், புதுச்சேரி அரசு வக்கீலாக ஐகோர்ட்டில் பணியாற்றி உள்ளார்.புதுச்சேரி குடிசை மாற்று வாரியம், புதுச்சேரி, ஆந்திர மாநில எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் வக்கீல் என பல்வேறு அரசு நிறுவனங்களின் வக்கீலாகவும் பாரத சக்ரவர்த்தி பணியாற்றி இருக்கிறார்.

முகமது ஷபிக்-விஜயகுமார்

முகமது ஷபிக் 26 ஆண்டுகளாக வக்கீலாக இருந்து வருகிறார். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரள ஐகோர்ட்டுகளில் வரி சம்பந்தமான வழக்குகளிலும், அரசியல் அமைப்பு, சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி வந்தார். வரி தொடர்பான வழக்குகளில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு அரசு பிளீடராக 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.ஆர்.விஜயகுமார் 28 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ராமமூர்த்தி ஆவார்.

ஆரம்பத்தில் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்த இவர், கடந்த 2004-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு கிளை தொடங்கியது முதல் அங்கு பணியாற்றி வருகிறார்.சிவில், கிரிமினல், அரசியல் அமைப்புச் சட்டங்கள், பணி தொடர்பான சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஸ்ரீமதி

ஸ்ரீமதி, திருச்சி சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர்.1989-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்த இவர், 32 ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com