கொரோனா தொற்றுக்கு பிறகு ரத்ததானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்தது - அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தகவல்

கொரோனா தொற்றுக்கு பிறகு ரத்ததானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் டாக்டர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றுக்கு பிறகு ரத்ததானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்தது - அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தகவல்
Published on

பொள்ளாச்சி

கொரோனா தொற்றுக்கு பிறகு ரத்ததானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் டாக்டர்கள் தெரிவித்தனர்.

பாராட்டு சான்றிதழ்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் உலக ரத்ததான தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அதிக முறை ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் அதிக முறை ரத்த தானம் செய்த 25 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர் சரவண பிரகாஷ், ரத்த வங்கி டாக்டர் மாரிமுத்து, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ரத்த தானம் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

ரத்த தானம் குறைந்தது

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தொற்றுக்கு முன் ஆண்டுதோறும் 3500 யூனிட் ரத்தம் வரை சேகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனாவிற்கு பிறகு ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது கடந்த ஒராண்டில் 2500 யூனிட் ரத்தம் தான் சேகரிக்கப்பட்டு உள்ளது. எனவே அனைவரும் ரத்த தானம் செயவதற்கு முன் வர வேண்டும்.

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள், சராசரியாக 45 கிலோ எடை கொண்டவர்கள் ரத்த தானம் செய்யலாம். தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தால், தடுப்பூசி போட்டு இருந்தால் ரத்தம் தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பவர்கள், கருச்சிதைவு, போதை ஊசி பழக்கம், எச்.ஐ.வி. பால்வினை நோய் தொற்று, மஞ்சள் காமாலை, இதய நோய், புற்றுநோய், கல்லீரல் பிரச்சினை இருந்தால் ரத்த தானம் செய்ய கூடாது. ரத்த தானம் செய்து பல உயிர்களை காக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com