தொகுதி எண்ணிக்கை குறைவு: சிரித்துக்கொண்டே அழுகின்றோம் - அர்ஜுன ராஜ் பேட்டி

ம.தி.மு.க.வின் தகுதிக்கு தகுந்தாற்போல் எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அர்ஜுன ராஜ் கூறியுள்ளார்.

தொகுதி எண்ணிக்கை குறைவு: சிரித்துக்கொண்டே அழுகின்றோம் - அர்ஜுன ராஜ் பேட்டி
Published on

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

காங்கிரசுக்கு 28 தொகுதிகள், தே.மு.தி.க.வுக்கு 10, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, ம.தி.மு.க. 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொ.ம.தே.க. ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கருணாஸ், தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. ஆகியவைகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் எந்தெந்த தொகுதி என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு பின், மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மதிமுக சார்பில் நாங்கள் கொடுத்த விருப்பப்பட்டியலில் இருந்தே 4 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள்.

நாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சி.. ஆனால் எண்ணிக்கை குறைந்ததில் வருத்தம். சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்.. நாங்கள் சிரித்துக் கொண்டே அழும் நிலையில் இருக்கிறோம்.

ம.தி.மு.க.வின் தகுதிக்கு தகுந்தாற்போல் எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகள் குறித்து இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்றார். இதனிடையே, மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கோவில்பட்டி, சீர்காழி (தனி) ஆகிய தொகுதிகள் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com