

கடலூர்,
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே திருத்துறையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 1,150 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
இதில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கலந்துகொண்டு உணவில் கலப்படம் கண்டறிதல், கலப்படத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
முகாம் முடிந்ததும் பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு சமையலறைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு சமைத்து வைத்திருந்த உணவுகளை ருசித்து பார்த்தார். 10-ம் வகுப்பு வரை பயிலும் 850 மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக ஒரு பாத்திரத்தில் முட்டைகள் வேக வைத்து வைக்கப்பட்டிருந்தன.
அதில் பெரும்பாலான முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தன. அனைத்து முட்டைகளும் நிறம் மாறி இருந்தன. துர்நாற்றமும் வீசியது. இதை கண்டு உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த முட்டைகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது என்று கூறினார். இதேபோல் அங்கு மற்ற நாட்களில் வழங்குவதற்காக முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதை பார்த்த உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன், இதனை தண்ணீரில் போட்டு ஆய்வு செய்து தரமான முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதையடுத்து 850 முட்டைகளில் 150 முட்டைகள் மட்டுமே தரமான முட்டைகள் என்று கண்டறியப்பட்டன. அந்த முட்டைகள் மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியை போன்று ஒறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பலாப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மனம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சத்துணவில் வழங்குவதற்காக அழுகிய முட்டைகள் வந்துள்ளன. பலாப்பட்டிற்கு முதல் நாள் வந்த முட்டைகளில் பெரும்பாலானவை அழுகிப்போய் இருந்தன. இதனால் அந்த முட்டைகள் அனைத்தும் அங்குள்ள ஏரியில் கொட்டப்பட்டன.
சத்துணவில் கெட்டு போன முட்டைகளை வழங்க யார் காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரி ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.