ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என வேலூரில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்
Published on

மாவட்ட செயற்குழு கூட்டம்

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் வேலூர் அனுகுலாஸ் ரெசிடென்சியில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அமலு விஜயன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கழக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், கஜேந்திரன், குமார பாண்டியன், பகுதி செயலாளர்கள் வன்னிய ராஜா, தங்கதுரை, பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வருகிற ஜூன் 3-ந் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்கப்பட உள்ளது. அதனை சிறப்பாக கொண்டாடுவது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பூத் வாரியாக உறுப்பினர்களையும், பொறுப்பாளர்களையும் அமைப்பது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி 2 கோடி உறுப்பினர் சேர்க்கும் முகாமை வேலூர் மாவட்டத்தில் மாநகரம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் பகுதிகளில் நிர்ணயித்த உறுப்பினர்களை இயக்கத்தில் இணைத்து இலக்கை அடைய பாடுபட்டு வெற்றி பெற வேண்டும்.

மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகையை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்து சாதனை படைத்த தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் வேலூர் மாவட்ட தி.மு.க சார்பில் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பழிவாங்கும் நடவடிக்கை

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வை நடந்ததாக யாரும் கருதவில்லை. நீண்ட நாள் வழக்கு நடந்து அதற்கு பிறகு அவருக்கு தரப்பட்டுள்ள அவகாசத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் செல்லும் வாய்ப்பிருந்தது. நீதிமன்ற கதவும் திறந்தது. ஆனால் ராகுல்காந்தி அதனை பயன்படுத்தும் முன்பே அவசர அவசரமாக பதவி நீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்திற்கு உகந்த முறையல்ல.

மாபெரும் நாட்டை மெஜாரிட்டியுடன் ஆளும் ஒரு கட்சி தனி மனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற சூழ்நிலை அரசியல் நோக்கர்களுக்கு ஏற்படுகிறது. எல்லா தலைவர்களும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளனர்.

ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்ய வேண்டும் என சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். அதனை பெட்டிற்கு அடியிலேயே வைத்திருக்க முடியாது.

இவர் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com