

நெல்லை,
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தி.மு.க. ஆட்சியில் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் நாங்கள் பேசும்போதும், எங்கள் பேச்சில் பாதியை வெட்டிவிட்டு வீடியோ பதிவை வெளியிடுகிறார்கள். சமூக வலைதளங்களில் தி.மு.க.வுக்கு எதிராக யாராவது கருத்து பதிவிட்டால் அவர்களை கைது செய்கிறார்கள்.
தென்காசியை சேர்ந்த மூத்த தி.மு.க. நிர்வாகி ஒருவர் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுப்பது போல் பேசுகிறார். ஆனால் அவர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. தி.மு.க. அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது.
தி.மு.க.வின் கூட்டணி பேச்சுவார்த்த மின்னல் வேகத்தில் நடைபெறவில்லை. மாறாக சினிமாவில் வரும் ‘வாமா மின்னல்..’ என்ற வசனத்தைப் போல் மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்துவிடும். தி.மு.க. உடனான தே.மு.தி.க.வின் கூட்டணி என்பது சினிமா காட்சி போன்றதுதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கின்றன.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.