பெரம்பலூர் புதிய பஸ் நிலைய சுற்றுச்சுவரை அழகுபடுத்திய ஓவியர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலைய சுற்றுச்சுவரில் ஓவியங்களை வரைந்து ஓவியர் அழகுப்படுத்தி உள்ளார்.
Published on

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அரியலூர், துறையூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே சுற்றுச்சுவரில் பயணிகள் சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் அந்த சுற்றுச்சுவர் மோசமாக காணப்பட்டு வந்ததுடன், துர்நாற்றமும் வீசி வந்தது.

இதனை கண்ட பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள எம்.எம்.நகரை சேர்ந்த செல்வராஜ்-கோகிலா தம்பதியின் மகனும், ஓவியருமான அஜீத் (வயது 23) என்பவர் அந்த சுற்றுச்சுவரை அழகுபடுத்த எண்ணினார்.இதையடுத்து அவர் நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் அந்த சுற்றுச்சுவரில் துர்நாற்றத்துக்கு இடையே நின்று தனது சொந்த செலவில் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். பின்னர் அவருக்கு நகராட்சி நிர்வாகம் ஓவியங்கள் வரைவதற்கு தேவைப்படும் பொருட்கள் வாங்க நிதி கொடுத்து உதவியது.

இதையடுத்து, அஜீத் அந்த சுற்றுச்சுவரில் தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் கிடா சண்டை, சேவல் சண்டை மற்றும் கோவில் யாழி சிற்பம், பூம் பூம் மாடு, கோவில் திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வதும், பூ கட்டும் பெண்மணியும், பரத நாட்டியம் மற்றும் தண்ணீர் குடங்களை தலையில் சுமந்து செல்லும் சிறுமிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் ஆகியவற்றின் படங்கள் ஓவியங்களாக தத்ரூபமாக வரைந்தார்.அஜீத் வரைந்த ஓவியங்களால் அந்த சுற்றுச்சுவர் தற்போது அழகாக காட்சியளிக்கிறது. அந்த ஓவியங்களை பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் ஒரு நிமிடம் ஆச்சரியத்துடன் நின்று வியந்து பார்த்து செல்வதோடு, பாராட்டியும் செல்கின்றனர். இதுகுறித்து ஓவியர் அஜீத் கூறுகையில், கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் ஓவியருக்கு பி.எப்.ஏ. படித்து முடித்து தற்போது ஓவியராக வலம் வருகிறேன்.

தற்போது புதிய பஸ் நிலையத்தில் நான் வரைந்த ஓவியங்கள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரவேற்பு பெற்றுள்ளது. மாவட்டத்தில் என்னை போல் ஓவியர்கள் நிறைய பேர் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் பெரம்பலூரில் ஓவிய கண்காட்சி நடத்த முன்வர வேண்டும். இதனால் ஓவியர்களின் திறமைகள் வெளிக்கொண்டு வர வாய்ப்பாக இருக்கும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com