ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடையா? பரிந்துரை வழங்கிய வல்லுநர் குழு

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையினை அளித்தது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடையா? பரிந்துரை வழங்கிய வல்லுநர் குழு
Published on

சென்னை:

ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு, பொருளாதாரத்தை இழந்தவர்களில் ஒருசிலர் உயிரை மாய்த்துக்கெள்ளும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனை தடுக்கும் வகையில், இது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழுவை கடந்த 10-6-2022 அன்று அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்குமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த குழு ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தில் இடம்பெற வேண்டியவற்றை பரிந்துரைகளாக தன்னுடைய அறிக்கையில் வல்லுனர் குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கியுள்ளது.

அவசர சட்டம் குறித்து மாலை அமைச்சரவை ஆலோசிக்க உள்ள நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக அவசர சட்டத்தை வகுக்க தேவையான பரிந்துரைகளை வல்லுநர் குழு அளித்துள்ளது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி குறித்து அவசர சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது.

இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு தனது அறிக்கையினை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com