

மகளிர் குழுவினருடன் கலந்துரையாடல்
தென்காசி தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில், பூத் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று மாலையில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அனைத்து கட்சிகளிலும் முதன் முதலாக வாக்குச்சாவடிகளில் மகளிர் குழுவை அமைத்தது அ.தி.மு.க.தான். பெண்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கும் கட்சி அ.தி.மு.க. தான். கட்சியிலும், ஆட்சியிலும் பெண்களுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பெண்களின் நலன் காக்கும் திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். முன்பு தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.82 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.
மக்களின் நலன்
இதேபோன்று கர்ப்பிணிகளுக்கு வழங்கிய உதவித்தொகையை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி, 67 லட்சம் பேருக்கு வழங்கினோம். அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு 16 வகையான பரிசு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்குகிறோம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.
ஏழை-எளிய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மாணவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். தமிழகம் பல்வேறு துறைகளிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது.
நலத்திட்டங்களை நிறைவேற்றும் அரசு
அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு கொடுத்துதான் பழக்கம். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுடைய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியில் உழைத்து வருகிறோம். சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க கூடாது என்பதற்காக, அனைவருக்கும் இலவச நிலமும் வழங்கி, வீடும் கட்டித்தருகிறோம். மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றும் ஒரே அரசு அ.தி.மு.க.தான்.
அ.தி.மு.க. அரசின் மக்கள் நலத்திட்டங்களை அனைவருக்கும் எடுத்துரைத்து வீடு வீடாக பிரசாரம் செய்ய வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்து, ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்கள்
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி, தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதல்-அமைச்சருக்கு ஆளுயுர ரோஜாப்பூ மாலை அணிவித்து அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோன்று பாவூர்சத்திரத்திலும் முதல்-அமைச்சருக்கு வெள்ளி வீரவாள் பரிசளித்து வரவேற்றனர்.