சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது - டிடிவி தினகரன்

கல்லூரி மாணவி மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

திமுக ஆட்சியில் கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் உறுதியாக மீட்டெடுக்கப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனது வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதோடு, கண்மூடித்தனமான தாக்குதலையும் அரங்கேற்றியதில் அம்மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு புரையோடிப் போயிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் சாலைகள், பேருந்து, ரெயில் நிலையங்கள், விமானங்களை தொடர்ந்து தன்னுடைய சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் அவர்களின் எதிர்காலம் வீணாவதோடு, அந்த கொடிய வகைப் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களால் அரங்கேற்றப்படும் கொலை, கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் சட்டம், ஒழுங்கு சீர்கேடுகளின் அடையாளமாக தமிழகத்தை மாற்றிவிட்டன.

எனவே, கல்லூரி மாணவி மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் அடுத்து மலரப்போகும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்ற உத்தரவாதத்தை மக்களிடம் அளிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com