ஈரோடு நகரில் பரபரப்பு; டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு நகரில் பரபரப்பு; டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
Published on

ஈரோடு,

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்றவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 154 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில் 9 கடைகளும், அந்தியூரில் ஒரு கடையும் என மேலும் 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

ஈரோடு நகரின் பெரியவலசு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அகற்றப்படவில்லை. இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பகல் 11 மணிக்கு கோஷங்களை எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

அப்போது பொதுமக்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தில் இந்த கடை செயல்பட்டு வருகிறது. அங்கு குடிமகன்கள் குடிபோதையில் ஆங்காங்கே அரைநிர்வாண கோலத்தில் விழுந்து கிடப்பதால் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றவேண்டும் என்றனர்.

சுவர் இடிப்பு

அதற்கு போலீசார், அதிகாரிகளிடம் உங்களது கோரிக்கை தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்றனர். அதை ஏற்க மறுத்த பொதுமக்கள் தடையை மீறி டாஸ்மாக் கடைக்குள் நுழைய முயன்றனர். கடைக்கு முன்பு அமைக்கப்பட்டு இருந்த பந்தல்களை பறித்து வீசினர். கடையில் தொங்கவிடப்பட்டு இருந்த பெயர் பலகைகளை ரோட்டில் தூக்கி வீசினர். மேலும், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து வெளியே இழுத்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் இருக்கும் பாருக்கு செல்லும் வழியில் உள்ள கதவை திறக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கதவு போடப்பட்டு இருந்த சுவரையே இடித்து தரைமட்டமாக்கினர்.

அடித்து நொறுக்கினர்

அதன்பின்னர் பாருக்குள் ஓடிய பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த அவித்த முட்டைகள், நிலக்கடலை, வெள்ளரிக்காய் போன்ற உணவு பொருட்களை எடுத்து கீழே கொட்டினர். மேலும், அங்கிருந்த சிமெண்டு இருக்கைகளையும் ஆவேசத்துடன் உடைத்தனர். தொடர்ந்து டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். உடனே போலீசார் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினர். அந்த பகுதியில் யாரும் நிற்காத வகையில் அனைவரையும் கலைந்து செல்லுமாறும் கூறினர்.

டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து கடையின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com