மக்களின் நிலம் மக்களுக்கே.. கூடலூரில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், கண்டனப் பேரணி - அண்ணாமலை

திமுக அரசு உடனடியாக மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களின் நிலம் மக்களுக்கே.. கூடலூரில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், கண்டனப் பேரணி - அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில், பல தலைமுறைகளாக சிறு நிலங்களில் விவசாயம் செய்து வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை “ரிசர்வ் பாரஸ்ட்” ஆக மாற்ற, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கடந்த 1969 ஆம் ஆண்டு ஜென்ம ஒழிப்பு சட்டத்தின் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட சுமார் 80,087 ஏக்கர் நிலத்தில், 29,982 ஏக்கர் வனநிலமாக மாற்றப்பட்டது. சுமார் 34,986 ஏக்கர் நிலம், தேயிலைத் தோட்டங்களின் வசம் உள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட 15,000 ஏக்கர் நிலத்தில், ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகள், ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என, பல தலைமுறைகளாக உழைத்து தங்கள் குடும்பங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலங்கள்தான், அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது.

இந்த நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 3,474 ஏக்கர் நிலத்தை மட்டும் வருவாய் துறைக்கு மாற்றவும், மீதமுள்ள 31,150 ஏக்கர் நிலத்தை “ரிசர்வ் பாரஸ்ட்” ஆக மாற்றவும் அனுமதி கோரியுள்ளது. இது, பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை நிலத்திலிருந்து வெளியேற்றும் அபாயத்தை உருவாக்கியிருக்கிறது.

வன பாதுகாப்பு என்ற பெயரில், ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது.

மக்களின் நிலம் மக்களுக்கே.

திமுக அரசு உடனடியாக இந்த மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், கூடலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும், மக்களுக்கு நிலத்தின் மேல் நிரந்தர உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி, கூடலூரில் இன்றைய தினம், அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. பொதுமக்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி சகோதர சகோதரிகளும், பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com