கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாச் சேவைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி


கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாச் சேவைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி
x

கோப்புப்படம்

பிப்ரவரி மாதம் மீண்டும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாச் சேவையை தொடங்க அனுமதிக்கக்கூடாது என்று அன்புமணி கூறியுள்ளார்.

சென்னை

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த தனியார் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறுத்தப்பட்ட நிலையில், நடப்பு ஜனவரி 12-ம்தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படும் சூழலில், பயணிகள் பாதுகாப்பையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் புறந்தள்ளிவிட்டு ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு திமுக அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கம்போடியாவைச் சேர்ந்த ஏரோடான் சாப்பர் என்ற நிறுவனம் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பயணிகளை ஏற்றிச் சென்று சென்னை, கோவளம், மாமல்லபுரம், கடற்கரை பரப்புகள் ஆகியவற்றை சுற்றிக்காட்டுவதுதான் ஹெலிகாப்டர் நிறுவனம் வழங்கும் சுற்றுலா சேவை ஆகும்.

ஹெலிகாப்டர் புறப்படும்போதும், தாழ்வான உயரத்தில் பறக்கும்போதும் ஏற்படும் இரைச்சலால் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் வலசை வரும் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி இந்த சுற்றுலாத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று 21.01.2024ம் நாள் அரசுக்கு கடிதம் எழுதினேன். இதே கோரிக்கையை வலியுறுத்தி 14.09.2024ம் நாள் அறிக்கை வெளியிட்டேன். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை நடத்தப்படுவதாகக் கூறி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம்தேதி ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு அரசு தடை விதித்தது. அதுமட்டுமின்றி, கோவளத்தில் உள்ள ஹெலிகாப்டர் நிறுவனத்தின் அலுவலகத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மூடி முத்திரையிட்டார். இந்த நடவடிக்கையை நானும் வரவேற்றேன். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை நிறுத்தப்பட்டதை வெகுவாக வரவேற்றனர்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக ஹெலிகாப்டர் சுற்றுலாச் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென கடந்த 12-ம் தேதி முதல் கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று தொடக்கி வைத்திருக்கிறார். 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த சேவை, காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். இதன் பின்னணியில் பெரும் ஊழலும், முறைகேடுகளும் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

மக்களின் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறித்தான் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. அவ்வாறு இருக்கும்போது எந்த அடிப்படையில் மீண்டும் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது? ஹெலிகாப்டர் பறப்பதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இப்போது ஹெலிகாப்டர் பறப்பதால் சுற்றுச்சூழலுக்கும், வலசை வரும் பறவைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

கிழக்குக் கடற்கரைச் சாலை, குறிப்பாக, கோவளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் ஆகும். உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக கோவளம் பகுதியில் உள்ள முட்டுக்காடு - கேளம்பாக்கம் உப்பங்கழிக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் வலசை வருகின்றன. கோவளத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூர் ஏரி, நன்மங்கலம் காப்புக் காடு ஆகியவையும் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வந்து செல்லும் பகுதிகளாகும். ஹெலிகாப்டர் தாழ்வாக பறப்பதால் ஏற்படும் இரைச்சல் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பதால், காலப்போக்கில் முட்டுக்காடு, , கேளம்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வருவது முற்றிலுமாக நின்று விடக்கூடும்.

அதுமட்டுமின்றி, ஹெலிகாப்டர் தளம் அமைந்துள்ள பகுதியில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியின் வழியாக உயர் அழுத்த மின்கம்பிகளும் செல்கின்றன. இத்தகைய சூழலில் அங்கு ஹெலிகாப்டர் சுற்றுலாச் சேவை நடத்துவது விபத்துகள் நடப்பதற்கும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். இந்த அடிப்படைகள் கூட தெரியாமல், நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு திமுக அரசு மீண்டும் அனுமதி அளித்திருப்பதை மன்னிக்கவே முடியாது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சரணாலயத்திலிருந்து 5 கி.மீ சுற்றளவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு பறந்தால் கூட அதனால் ஏற்படும் இரைச்சலால் கழுகுகள் மற்றும் மலைப்பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சூழலியல் வல்லுனர்கள் தெரிவித்தக் கருத்துகளை ஏற்று ஊட்டியில் நடத்தப்படவிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்திருக்கிறது. ஆனால், கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் மட்டும் இந்த பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதையும், அந்த சேவையை அமைச்சரே நேரில் சென்று திறந்து வைப்பதையும் பார்க்கும்போது அதன் பின்னணியில் நடந்திருப்பதை யூகிக்க முடிகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இப்போது வரையிலான ஓராண்டில் கோவளம் பகுதியின் பூகோள அமைப்பில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை; அங்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது குறைந்து விடவில்லை; ஹெலிகாப்டரின் பறக்கும் தன்மையிலும், இரைச்சலின் அளவிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; அவ்வாறு இருக்கும்போது ஓராண்டாக முடக்கி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலாச் சேவைக்கு இப்போது அவசரம் அவசரமாக அனுமதி அளிக்க வேண்டியத் தேவை என்ன? இதன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், ஆட்சிக்காலத்தின் கடைசி கட்டத்தை அடைந்திருக்கும் திமுக அரசு, அதிகாரத்தை விட்டு வீட்டுக்குச் செல்லும் போது கிடைத்ததையெல்லாம் சுருட்டிக் கொண்டு செல்லும் மனநிலையில்தான் இந்த சேவைக்கு அனுமதி அளித்திருப்பதாகவும் எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை புறம்தள்ள முடியவில்லை.

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாச் சேவைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்; பிப்ரவரி மாதம் மீண்டும் அந்த சேவையை தொடங்க அனுமதிக்கக்கூடாது. எந்த அடிப்படையில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது? அதன் பின்னணியில் ஊழல் நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். விதிகளையும், மக்கள் நலனையும் மீறி ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு அனுமதி அளித்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எத்தகைய உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதை செய்ய திமுக அரசு தவறினால், இயற்கையையும், பறவைகளையும் பாதுகாக்கும் நோக்குடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவது, திமுக அரசின் அநீதிக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பாமக மேற்கொள்ளும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story